கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே வேட்டைக்காரன்குட்டை பகுதியில் நேற்று அதிகாலை வடமாநில இளைஞர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்த மணி என்பவரது வீட்டில் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரை பிடித்த பொதுமக்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பிடிபட்ட இளைஞர் ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் அருகேயுள்ள, மால்காரா கிராமத்தைச் சேர்ந்த சட்டெ இந்திர பிரசாத்(35) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவரது கைரேகையை பதிவு செய்யும் பணியை காவலர்கள் மேற்கொண்டிருந்தபோது திடீரென இந்திர பிரசாத் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து கருமத்தம்பட்டி காவலர்கள், அந்த இளைஞரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது எப்படி என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு, காவல் துறை வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்காக அழைத்துச் சென்று, காவல் துறையினர் தாக்கியதால், அந்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவின. ஆனால், இதை கருமத்தம்பட்டி காவல் துறையினர் மறுத்துள்ளனர். மேலும்,வடமாநில இளைஞர் சட்டெ இந்திரபிரசாத் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சூலூர் காவல் ஆய்வாளர் முருகேசனுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.