கோவை:தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி ஜெயா (37). இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். குருமூர்த்தி பாப்பம்பட்டி - பல்லடம் சாலையில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணியாளவில் குருமூர்த்தி தனது கடைக்கு சென்று விட்ட நிலையில், ஜெயா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
அதே பகுதியில் கோழித் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருவதால், அங்கிருந்து கோழித் தீவனம் ஏற்றிச் செல்ல நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்வது வழக்கம். லாரிகள் அங்குள்ள புக்கிங் ஆபிஸ்களுக்கு முன்பு நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி காத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள் லாரிகளிலேயே சமைத்து சாப்பிடுவதும் வழக்கம்.
அவ்வாறு ஜெயாவின் வீட்டிற்கு வந்த ஒரு லாரி டிரைவர் தனியாக இருந்த ஜெயாவிடம் சமைக்க தண்ணீர் கேட்டுள்ளார். அருகில் இருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சொல்லி விட்டு அவர் வீட்டிற்குள் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து ஜெயா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, மீண்டும் வந்த அதே நபர் ‘கொஞ்சம் உப்பு வேண்டும்’ எனக் கேட்டுள்ளார். இதையடுத்து உப்பு எடுக்க ஜெயா வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அப்போது வெளியே நின்றிருந்த அந்த நபர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து ஜெயாவின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு சத்தம் போட்டால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயா அதிர்ச்சி அடைந்தாலும், உடனடியாக சுதாரித்துக் கொண்டு லாரி ஓட்டுநரின் கையை சுழற்றி பிடித்து மற்றொரு கையால் கடுமையாக தாக்கியதாக கூறியுள்ளார்.
ஜெயா தனது ஒரு கையால் கத்தி இருந்த கையைப் பிடித்துக் கொண்டு,மற்றொரு கையால் சரமாரியாக குத்தியுள்ளார். அப்போது லாரி ஓட்டுநர் மிரட்டிய போதும், ஜெயா அச்சப்படாமல் தொடர்ந்து தாக்கியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் அடி உதையை சமாளிக்க முடியாமல் தப்பித்தால் போதும் என ஓடியுள்ளார். அப்போது அந்நபர் கொண்டு வந்திருந்த கத்தி, செல்போன் ஆகியவற்றையும் அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.
மேலும் அந்நபர் வந்த லாரியையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து ஜெயா சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சூலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, லாரி ஓட்டுநர் விட்டுச் சென்ற பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சூலூர் காவல் துறையினர், செல்போன் மற்றும் லாரி எண்ணை வைத்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மனைவிக்கு உடம்பு சரியில்லை - லாரி செல்ல அனுமதிக்க கோரிய ஓட்டுநர்