கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் வீடுகளை அதிகாலை ஒற்றை காட்டு யானை இடித்து தள்ளியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து கோவை மலைவாழ் மக்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், வனத்துறை அலுவலர்கள் இதன் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு பழங்குடியின மக்களின் உயிர்களை பாதுகாத்திட வேண்டும் எனவும், பாதுகாப்பான தங்கும் புதிய தொகுப்பு வீடுகள் அங்குள்ள வருவாய் துறை, மின் வாரியத் துறைக்குச் சொந்தமான காலி இடங்களில் அமைத்து இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
வீடுகளை இடித்து தள்ளிய காட்டு யானை: அச்சத்தில் மலைவாழ் மக்கள் - வீடுகளை இடித்த யானை
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்குள்ள வீடுகளை இடித்து தள்ளியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதே பகுதியில் இரண்டு மாதம் முன்பு காட்டை விட்டு வெளியேறிய யானை ஒன்று, வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த மாகாளி என்பவரையும், அதற்கு முன் தினம் ரஞ்சிதா என்ற சிறுமியையும் கொன்றது. இதனால் மலைவாழ் மக்கள் பல்வேறு கட்டப்போராட்டங்களை நடத்தியதையடுத்து, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஒரு வார காலம் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு யானைகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. காட்டு யானைகள் நடமாட்டம் ஓரிரு வாரத்தில் குறைந்த நிலையில், மீண்டும் சமீபத்தில் 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இது குறித்து நவமலை, பழங்குடி மக்களும் வனத்துறை அலுவலர்களுக்கும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை நடந்துள்ள இச்சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், கடந்த ஐந்து நாட்களாக வேட்டை தடுப்பு காவலர்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.