கோயம்புத்தூர்:சிறுமுகை அருகே திம்மராயம்பாளையம் கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பவானி ஆற்றுப் படுகையில் உள்ள இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், இந்தபகுதி மக்கள் அதிகளவில் பெருமாளை வழிபடுவது வழக்கம். கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோயில் உள்ளதால் அதனைச் சுற்றியுள்ள மக்கள் வைணவத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திம்மராயம்பாளையம் கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை மாரம்மாள் என்பவரது தோட்டத்தில் கருடன் இறந்து கிடப்பதாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த கருடனை ஐதீகப்படி நல்லடக்கம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர்.
தொடர்ந்து கிராம மக்கள் இணைந்து தேர் கட்டி அதில் கருடன் உடலை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது பின்னால் வந்த கிராம மக்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோசம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே கருடன் உடல் மீது நெய் ஊற்றி எரியூட்டினர். தொடர்ந்து எரிந்த சாம்பலை எடுத்து சென்று அருகே உள்ள பவானி ஆற்றில் கரைத்தனர்.