திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் குஜிலம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் 50 பேர் இரண்டு சுற்றுலா வேன்களில் பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் உள்ள உறவினரின் காதணி விழாவிற்கு நேற்று வந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் வால்பாறையிலிருந்து திரும்பியவர்கள் வால்பாறை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் பள்ளத்தில் கவிழ்ந்த வேனுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 11 பெண்கள், 7 ஆண்கள், 6 குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் படுகாயமடைந்தனர். மேலும், கமலவேணி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விபத்தில் சிக்கிய ஒருவர் கூறுகையில், 'காதணி விழாவிற்கு சென்றுவிட்டுத் திரும்பியபோது நடந்த இந்த விபத்தால் உறவினர்கள் சோகமடைந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் உருண்டு சென்றபோது உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்று அச்சத்தில் இருந்தோம். ஆனால், அவ்வழியாக சென்ற இளைஞர்கள், பொதுமக்கள் எங்களை மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். அவர்களுக்கு நன்றி' எனத் தெரிவித்தார்.
சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் படுகாயம் மேலும் இந்த விபத்து குறித்து காடம்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனம் விரைவில் மீட்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு!