தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 29, 2022, 8:05 PM IST

Updated : Mar 29, 2022, 10:09 PM IST

ETV Bharat / state

பருத்தி பஞ்சு பதுக்கல்..பியூஷ் கோயலைச் சந்திக்கும் ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனம்

பருத்தி பஞ்சு பதுக்கல், விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 4ஆம் தேதி ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேசவுள்ளதாக அகில இந்திய ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.

பியூஷ் கோயலைச் சந்திக்கும் ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனம்
பியூஷ் கோயலைச் சந்திக்கும் ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனம்

கோயம்புத்தூர்:கோவையில் அகில இந்திய ஜவுளி உற்பத்தி சம்மேளனத் தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் ரவி சாங், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா ஆகியோர் இன்று (மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "ஜவுளித்துறை இக்கட்டான சூழலில் உள்ளது. பருத்தி பஞ்சின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மாதம் இருமுறை விலை உயர்கிறது. மத்திய அரசு பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி எம்என்சி இடம் சென்று விட்டது. அந்நிய நாட்டு நிறுவனங்கள் பருத்தியை வாங்கி கொண்டு வருகின்றனர்.

அகில இந்திய ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனம்

கடந்த 2021இல் பிப்ரவரி மாதத்தில் பருத்தி பஞ்சு விலை கண்டி ஒன்றுக்கு 44 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 90 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. பருத்தி இருப்பு பற்றிய நம்பகத்தன்மையான தகவல்கள் தரவுகள் எதுவும் இல்லை.

பெரிய அளவில் வேலை இழப்பு:நூற்பாலைகள் பொறுத்தவரை சுமார் 40 சதவீத ஆலைகள் மட்டுமே ஜவுளி ஆணையர் அலுவலகத்தில் தரவுகளை சமர்ப்பித்து வருகின்றனர். பருத்தி என்பதே இல்லை என்ற மாயையை உருவாக்கி செயற்கை விலையேற்றம் செய்கின்றனர்.

ஜவுளித்துறை ஆணையம் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பருத்தியை மீட்கவில்லை என்றால் பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படும். திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொழில் முடக்கம் ஏற்படும். இது வங்கிகளையும் பாதிக்கும்.

பருத்தி விலை உயர்வதற்கு அந்நிய நாட்டு நிறுவனங்கள் பருத்தியை பதுக்கி வைத்திருப்பதே காரணம் எனக் கருதுகிறோம். ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்ய முடியும்.

தமிழ்நாட்டிற்கு பருத்தி அதிகம் தேவை. இவற்றையெல்லாம் குறித்து வருகின்ற 4ஆம் தேதி ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேசவுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மிகப்பெரிய அமேசான் அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Mar 29, 2022, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details