கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தெற்கு ஊராட்சிக்குள்பட்ட மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இங்கு தலைவர், துணைத் தலைவர், ஆறு வார்டு உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக உள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த தலைவர் மயில்சாமிக்கும், பாஜகவைச் சேர்ந்த துணைத் தலைவர் ரவி என்பவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததால் மலையாண்டிபட்டினத்தில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. மேலும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்குச் சென்று சேரவில்லை.
அரசு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் எனக் கோரிக்கைவைத்தும் செவிசாய்க்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் காவல் துறையினர் ஊராட்சிப் பிரதிநிதிகளிடமும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தி தீர்வுகாண பொதுமக்கள் கூறினர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதென முடிவுசெய்யப்பட்டது.