கோயம்புத்தூர்: கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் அடுத்த கோவைபுதூர் பிரிவில் தனியார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியினைச் சுற்றி பிரமாண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூலை 4) மாலை கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் 6 பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களை காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களில் மூன்று பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இரண்டு பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா, மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வரும் இடத்தில் நீரோடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், சுற்றுச்சுவர் முழுவதும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்பு இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சுற்றுச்சுவர்கள் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் கூரினார். மேலும், இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக யார் செயல்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் கூறினார்.