கோவை மாவட்ட காவல் துறை 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள், பதிவான வழக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இவ்வாண்டு பதிவான 41 கொலை வழக்குகளில் 38 கொலை வழக்குகளில் எதிரிகள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்குள்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆதாயக்கொலை (2), கூட்டுக்கொள்ளை (4), வழிப்பறி (39) கன்னக்களவு (6), திருட்டு (349) ஆகிய குற்றங்கள் தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட 400 வழக்குகளில் 307 வழக்குகள் (77%) கண்டுபிடிக்கப்பட்டு களவாடப்பட்ட சொத்தின் மதிப்பு ரூபாய் 3,77,50,125 மதிப்பிலான சொத்துக்களில் ரூபாய் 3,19,65,540 மதிப்பிலான (85%) சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயர் அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி செய்யப்பட்ட பகல், இரவு ரோந்தின் காரணமாக கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு 185 குற்ற வழக்குகள் குறைந்துள்ளன. 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் 4 விழுக்காடு அதிகமாக குற்ற வழக்குகள் துப்பு துலக்கப்பட்டுள்ளன.
இதில், இந்த ஆண்டு ஏழு விழுக்காடு அதிகமான களவுபோன பொருள்கள் (85%) மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்த 7 கொலை வழக்குகளில் 5 வழக்குகளில் ஆயுள் தண்டணையும், 2 வழக்குகளில் 7 ஆண்டு சிறைத்தண்டனையும் 1 ஆதாய கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் நீதிமன்றம் மூலம் உறுதிசெய்யப்பட்டது. 1 கூட்டுக்கொள்ளை வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை நீதிமன்றம் மூலம் உறுதிசெய்யப்பட்டது.
பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள்
கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக இவ்வாண்டு பதிவான 6 பாலியல் வன்கொடுமை குற்றங்களில் எதிரிகள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்குள்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 63 பதிவாகியுள்ளன. அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்கீழ் 121 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற 8 போக்சோ வழக்குகளில் 5 வழக்கில் எதிரிக்கு ஆயுள் தண்டனையும், 1 வழக்கில் 7 வருட சிறைத்தண்டனையும் 1 வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 1 வழக்கில் எதிரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் பெற்றுத்தரப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் சம்பந்தமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 10 போக்சோ வழக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
மதுவிலக்குத் தொடர்பாக இந்தாண்டு 4,794 வழக்குகள், போதை பொருள்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 120 வழக்குகள், லாட்டரி தொடர்பாக 252 வழக்குகள், சூதாட்டம் தொடர்பாக 382 வழக்குகள், மணல் திருட்டு தொடர்பாக 14 வழக்குகள், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருள்களை விற்றது தொடர்பாக 499 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.