தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் நீளும் குழந்தைத் திருமணங்கள்... என்ன சொல்கிறது ஈடிவி பாரத் களஆய்வு? - குழந்தைத் திருமணங்கள்

தமிழ்நாட்டு மக்களிடையே குழந்தைத் திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளதா, குழந்தைத் திருமணங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் களஆய்வு மேற்கொண்டுள்ளது. அது குறித்து சிறப்புத் தொகுப்பு இதோ...

the-number-of-child-marriages-in-coimbatore-has-increased-in-the-current-year
the-number-of-child-marriages-in-coimbatore-has-increased-in-the-current-year

By

Published : Dec 24, 2020, 5:57 PM IST

Updated : Dec 25, 2020, 7:42 PM IST

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களின் திருமண வயது 21ஆகவும், பெண்களின் திருமண வயது 18ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் நிதித் தேவை, உறவுகளின் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 18 வயது நிரம்பாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது தொடர் கதையாகி வருகிறது.

இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஆங்காங்கே நடைபெறும் திருமணங்களைத் தடுக்க முடியாத சூழலும் நிலவுகிறது.

மதுரை, கோவை என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் தற்போது பரவலாக அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலான கரோனா காலகட்டத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 100க்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உசிலம்பட்டியில் மட்டும் 13 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் (2019) 53 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் (2020) அவை 78ஆக அதிகரித்துள்ளன என சமூக நலத்துறை அலுவலர்கள் அதிர்ச்சிகரத் தகவலை அளித்துள்ளனர்.

மேலும், கோவை மாவட்டத்தில் சூலூர், மதுக்கரை மற்றும் மாநகராட்சியின் மத்தியப் பகுதிகள் அதிக அளவு குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் பகுதிகளாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பகுதிகளில் சமூக நலத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும், ஊர்வலங்கள் மூலமாக குழந்தைத் திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க 1098 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் தடுக்கப்பட்ட குழந்தைத் திருமணங்கள்

புள்ளி விவரங்களின்படி, கோவை மாவட்டம், சூலூரில் அதிகபட்சமாக 14 திருமணங்கள், கோவை மத்தியப் பகுதியில் 10 திருமணங்கள், மதுக்கரை பகுதியில் எட்டு குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுபோன்ற திருமணங்கள் ஏன் நிகழ்கின்றன? இதற்கான சமூக உளவியல் காரணிகள் என்ன? என்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் மன நல வல்லுநர் முனைவர் ராணி சக்ரவர்த்தி சிறப்புப் பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசுகையில், 'தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற குழந்தைத் திருமணங்களில் 30லிருந்து 40 விழுக்காடு அரசின் கவனத்திற்கு வராமலேயே நிகழ்கின்றன. இதன் காரணமாக நிறைய திருமணங்கள் தடுக்க முடியாமலேயே போய்விடுகின்றன. இதுவரை நான் கண்ட குழந்தைத் திருமணங்களில் 10இல் 6 திருமணங்களுக்கு பெற்றோர்கள் முன் வைக்கும் காரணம், காதல். மற்றவை குழந்தை காதல் வயப்படுமோ என்ற அச்சத்தினாலும், சாதிய உணர்வினாலும் நடக்கின்றன. சமூக கட்டமைப்பால் இவை தென் தமிழ்நாட்டின் பகுதிகளில் யதார்த்தமான ஒன்றாகவே மாற்றப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்களது பெண்ணுக்கு செய்துவைக்கும் திருமணத்தை தங்களது முக்கியக் கடமையாகவும், சுமையாகவும் கருதுகின்றனர். எனவே, தங்களது பெண்ணைத் திருமணம் செய்யவுள்ள மணமகன் வயதான அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருப்பினும் அத்திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சில கிராமங்களில் குழந்தைத் திருமணங்கள் பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது. 20 வயதுக்குள் பெண்ணுக்குத் திருமணம் நடைபெறவில்லையெனில், 'தெய்வ குற்றம்' என நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி, திருமணம் ஆகாத பெண் 'முதிர் கன்னி' என்ற வரையறைக்குள் தள்ளப்படும் நிலையும் நிலவுகிறது.

பொதுவாகவே பெண்கள் 20லிருந்து 21 வயதுக்கு மேல்தான் உடல்ரீதியாக பலம் பெறுகிறார்கள். குழந்தைத் திருமணங்களில் நிகழும் பிரசவம் மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைத் திருமணத்திற்கு உள்ளானவர்களே அதிகளவு குறைப்பிரசவம், ரத்தசோகை, புற்றுநோய், உறுப்புச் சிதைவு உள்ளிட்டப் பல்வேறு உடற்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க அவர்கள் தன்னைக் குறித்தும், தன்னுடைய உரிமைகள் குறித்தும் அறியும் பருவத்தில் மிக அதிகளவு மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார். இதுவே, திருமணத்தைத் தாண்டிய உறவுக்கு வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி, பிறரிடம் அறிவுரை பெற்றே வளரும் சூழலினால், இவர்களுக்கு வரதட்சணைக் கொடுமைகளும் அதிகம் நிகழ்கின்றன.

'குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் விளைவுகள்?'

இதுபோன்ற சட்ட மீறுதலுக்கு தரக்கூடிய தண்டனைகள் மிகச் சாதாரணமானதாக உள்ளன. ஆகையால், சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டால்தான் இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும். மேலும், 18 வயதிற்குள்ளான பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெறவது குற்றம். ஆனால், இதனை மீறி நடைபெற்ற திருமணங்களுக்கு என்னவிதமான சட்ட நடைமுறைகள் உள்ளன? குறிப்பாக அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் குறித்து திட்டவட்டமான அரசின் செயல்பாடுகள் என்ன? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே தற்போதுவரை உள்ளது.

பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரங்கள் மிகவும் அவசியமானதாக மாறுகின்றது. அவர்களை சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து கண்காணித்தாலே குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியவற்றில் சிக்கித் தவிப்போரை மீட்கலாம். அதேபோன்று இக்குற்றத்தை இழைத்த குடும்பங்கள், ஆண்கள், பெண்கள் மீதான தண்டனைகள் குறித்த முழுவிவரங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அந்தத் திருமணத்தில் பங்கேற்ற ஊர்ப்பெரியவர்களுக்கும் தண்டனை வழங்க, சட்டத்தில் இடம் இருந்தும் இதுவரை எத்தனை பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். பெண்கல்விக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனாலும்கூட, அந்தக் கல்வியானது எதுவரை பெண்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் தேவையான அழுத்தமில்லை.

பெண்களுக்கு உயர் கல்வி வரை அவர்களது கல்வியை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகிறது. மேலும் பள்ளிப்பருவத்திலேயே தேவையான விழிப்புணர்வை பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது தற்போது காலத்தின் கட்டாயமாகியுள்ளது' என்கிறார் ஆதங்கத்துடன்.

குழந்தைத் திருமணங்கள் தலைதூக்க ஆரம்பித்திருக்கும் அதே வேளையில், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளும் அதிகளவில் நிகழ்கின்றன. இதற்கு மாறிவரும் கலாசாரங்களும், தகவல் தொழில் நுட்பப் பயன்பாடும் ஓரளவிற்கு காரணங்களாகின்றன. இதனைத் தடுக்க வளர் இளம் பருவத்திலேயே மாணவர்களுக்கு ஆண், பெண் பாகுபாடின்றி பாலியல் கல்வி, உடலில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் உண்டாகும் விளைவுகள் எனப் பலவற்றைக் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் என அனைத்துத் தரப்பினரும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

'குழந்தைத் திருமணத்தைத் தடுக்க என்ன செய்யலாம்?'

உலகளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பினும், ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு வழிகளில் முன்னேற வேண்டிய அவசியமுள்ளது. அவற்றை வளர் இளம் பருவ மாணவர்களின் மனதில் ஆழப்பதிய வைப்பதில் அரசின் கடமை அளப்பரியது. நாளிதழிலும், செய்திகளிலும் நிகழும் வன்கொடுமைகளுக்கான புள்ளி எங்கு தொடங்கியிருப்பினும், அவற்றைக் கண்டறிந்து களைவது, இந்நாட்டு மக்கள் அனைவரின் கடமை. அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து பயணிப்போம்...

இதையும் படிங்க: 2020 சினிமா செய்திகள்: டாப் 50!

Last Updated : Dec 25, 2020, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details