கோவை:கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தனியார் நகைகடையில் இருந்து 6.5 கிலோ தங்க நகைகளை நடராஜ் என்பவர் ஹைதராபாத் கொண்டு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் நகைக்கடைக்கு நகையும் செல்லவில்லை. அவரிடமும் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த நகைக் கடை உரிமையாளர் பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடராஜை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஓடும் பேருந்தில் தூங்கிய நேரத்தில் நகைகள் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்பின் தனிப்படை போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பேருந்தில் பயணம் செய்த அனைவரின் தகவல்களை திரட்டியுள்ளனர். அப்போது நடத்துனரிடம் விசாரித்ததில் ஒரு பயணி மட்டும் ஹைதராபாத் வருவதற்கு முன்பே பதட்டத்துடன் இறங்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கோவையிலிருந்து ஹைதராபாத் வரைக்கும் இருக்ககூடிய டோல்கேட் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர். அப்போது பேருந்தை பின் தொடர்ந்து ஒரு கார் நீண்ட நேரமாக வந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த காரின் விவரங்களை சேகரித்தப் போது மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் கஞ்சர்சேர்வா ஊரில் உள்ளவர்களால் நகை திருடப்பட்டதை கோவை போலிசார் கண்டுபிடித்தனர்.