கோயம்புத்தூர் உக்கடம் பகுதி, ஐந்து முக்கு ரோட்டிலுள்ள மாகாளியம்மன் கோயில் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் குப்பைகளை எரித்துச் சென்றனர். அதேபோன்று ரயில் நிலையம் முன்புள்ள விநாயகர் கோயிலில் வாகன டயரை எரித்துச் சென்றனர். டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சூலத்தை வளைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், நல்லாம்பாளையத்திலுள்ள அம்மன் கோயிலின் உடைமைகளை எரித்து, இறைச்சி ரத்தத்தை தெளித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஐந்து முக்கு ரோட்டில் உள்ள கோயில் முன்பு எரித்துச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
அதில் ஒரு நபர் கோயில் முன்பு டயர்கள், துணிகளைப் போட்டு எரித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றது பதிவாகி உள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒரே நாள் இரவில் பல்வேறு இடங்களில் கோயில்கள் முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக