கோயம்புத்தூர்:திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.16) தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. முன்னதாக தமிழக அரசு தரப்பில் வெளியான உத்தரவில் "வரும் 16.01.2023 திங்கட்கிழமை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அதிகாலை 12 மணி முதல் இரவு 12 மணி வரை, எங்கும் ஆடு, மாடு, கோழி முதலான எந்த வித உயிரினங்களையும் இறைச்சிக்காகவோ அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ வதை செய்யவோ அல்லது மாமிசத்தை விற்பனை செய்யவோ கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடையை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அரசின் உத்தரவை அடுத்து கோவை, தூத்துக்குடி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிக்கு உள்பட்டப் பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளில் இன்று இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட வடவள்ளி, கவுண்டம்பாளையம், பி.என்.புதூர், இடையார்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் தடையை மீறி இறைச்சி விற்பனை களைகட்டுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தடையை மீறி இறைச்சி விற்ற கடை உரிமையாளர்களை மடக்கிப் பிடித்தனர்.