கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்திப் பெற்ற மாசாணியம்மன் கோயில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகைதந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி கொடிமரம் கட்டி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஆழியார் ஆற்றங்கரை சோமேஸ்வரர் ஆலயம் அருகே மயான பூஜை நடைபெற்றது. மாசாணி அம்மனின் திருவுருவம் மண்ணால் வடிவமைக்கப்பட்டு பட்டுப்புடவை போர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அருளாளி மனோகரன் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார். அப்போது பம்பை காரர்கள் பம்பை அடித்து அம்மனின் வரலாற்றைப் பாடலாகக் கூறினர். கோயில் அருளாளி அருண் ஆழியார் ஆற்றிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை அம்மன் மீது தெளித்து பூஜை நடத்தினார்.