கோயம்புத்தூர்: தருமபுரியில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானையை கும்கி யானை உதவியுடன் கடந்த 5 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் யானை விடப்பட்டது.
அதன் பிறகு காட்டில் இருந்து திடீரென வெளியேறிய மக்னா யானை கோவை மாநகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. ஆகையால் வனத்துறையினர் மக்னா யானையை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். அதன் பின் மீண்டும் கும்கி யானை உதவியுடன் பேரூரில் பிப்.23ம் தேதி மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
பிடிபட்ட யானையை வனத்துறையினர் தமிழக - கேரள எல்லைப்பகுதியான முள்ளி வனப்பகுதியில் விட முடிவு செய்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் முள்ளி வனப்பகுதியில் மக்னா யானையை விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்ளி வன பகுதியில் யானை விடப்பட்டால் மீன்டும் ஊருக்குள் வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறி வெள்ளியங்காடு பகுதியில் யானை வந்த லாரியை சிறைப்பிடித்து விவசாயிகள், பொது மக்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மக்னா யானையை மீண்டும் டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்வதா, இல்லை வேறு ஏதேனும் வனப்பகுதியில் விடுவதா என வனத்துறையினர் குழம்பி இருந்தனர். இந்நிலையில் இறுதியாக வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடந்த வனப்பகுதியில் மக்னா யானை விடுவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: முள்ளி வனப்பகுதியில் மக்னா யானையை விட கடும் எதிர்ப்பு - வனத்துறை குழப்பம்!