கோவை ரத்தினபுரி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி இரவு 11 மணியளவில் மணிகண்டன் வீட்டிற்கு சென்ற நான்கு பேர் காவல்துறையினர் எனக் கூறி கஞ்சா வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என மணிகண்டனை அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், மறுநாள் 26ஆம் தேதி காலை மணிகண்டனின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையம் சென்ற போது, விசாரணைக்கு தாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், 26ஆம் தேதி மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயில் பகுதியில் பலத்த காயங்களுடன் மணிகண்டன் கிடந்துள்ளார். அவரை மீட்ட மேட்டுப்பாளையம் காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு மாற்றப்பட்ட மணிகண்டன் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.