கோயம்புத்தூர்:தடாகம் வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடியை கடித்த நிலையில் பெண் யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காக இந்த நாட்டு வெடியை வைத்த நிலையில் தவறுதலாக யானை கடித்துள்ளது. பின், யானையின் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உட்கொள்ள முடியாமல் பல நாள்கள் உயிருக்கு போராடிய நிலையில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாட்டு வெடி வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதி ஓட்டியுள்ள இடங்களில் அவுட்டுக் காய் எனப்படும் நாட்டு வெடி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தால் வனத்துறையில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். இதனிடையே
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை, IOB காலணி, கல்வீரம்பாளையம், பொம்மனம்பாளையம், தாளியூர், கெம்பணுர், அட்டுகல், தடாகம், வீரபாண்டி, ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நேற்று (செப்.16) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.