மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அகிம்சையை போதிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் இறைச்சி கூடங்களுக்கும் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், காந்தியின் 150வது பிறந்தநாளான இன்று கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும், டாஸ்மாக் கடைகளை சாத்திவிட்டு அருகில் உள்ள பார்களில் எந்த ஒரு அச்சமுமின்றி மது விற்பனை நடைபெற்றுவருகிறது.
காவல் நிலையத்திற்கு அருகேயும், நெடுஞ்சாலைகளின் ஓரத்திலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுப் பிரியர்கள் வழக்கம்போல மதுவை வாங்கிச் செல்கின்றனர். காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும் மதுக்கடைகள் திறந்திருப்பதை கண்டுகொள்ளவேயில்லை. இதனால் எப்போதும் போல வியாபாரம் களை கட்டுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காந்தி ஜெயந்தியில் மதுவிற்பனை; கண்டுகொள்ளாத காவல்துறை இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகையில், அகிம்சையை போதித்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளில் இறைச்சி கடைகளுக்கும், மது கடைகளுக்கும், அக்டோபர் 2ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கிறது. ஆனால் இந்த தடைகள் எதையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் ஊழியர்களும், பார் ஊழியர்களும் மது விற்பனை செய்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் சிறப்புப் பாடலை பகிர்ந்தார் குடியரசு துணைத் தலைவர்