மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ஒன்றாம் நாள் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு தின விழாவைக் கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக கோவை பெரியார் படிப்பகத்தில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கேக் வெட்டியும், முழக்கங்களை எழுப்பியும் தமிழ்நாடு தின விழாவைக் கொண்டாடினர்.
கர்நாடகா போல தமிழ்நாட்டிற்கு என மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தனிக்கொடியினை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும், அப்படி செய்தால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கிய தமிழ்நாடு கொடியினை திரும்ப பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு தினத்தை பண்பாட்டு நாளாக கொண்டாடப்பட வேண்டும், இந்நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் அறிமுகம் செய்த தமிழ்நாடு கொடியினை ஏற்ற, காவல் துறையினர் தடை விதித்துள்ளது, காவலர்கள் குவிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.