தமிழ்நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை தமிழ்நாடு காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர், மத்திய அரசின் சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், ராணுவம், கடற்படையினர் தனித் தனியே சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
6 பயங்கரவாதிகளும் கோவையை மையமாக வைத்து ஏதேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட வாய்ப்பிருப்பாதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கோவை மாநகர் முழுவதும் காவல் துறையினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊடுருவியுள்ள ஆறு நபர்களில் ஒருவருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு வைத்திருந்ததாக கூறி கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சகீர் மற்றும் சென்னையைச் சேர்ந்த சித்திக் ஆகியோரைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இருவரையும் கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் கோவையில் கைது கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, காவல் துறை துணை தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் தலைமையில் பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடக்கிறது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்ற அடிப்படையில் இருவரை காவல் துறையினர் பிடித்துள்ள நிலையில், கோவையில் பரபரப்பு நிலவுகிறது.
இதையடுத்து ஆலாந்துறை காருண்யா காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் நிலைய எல்லைக்குள் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.