கோயம்புத்தூர்:தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க செப்டம்பா் 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவித்துள்ளாா். இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023ம் ஆண்டில் தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12.11.2023 அன்று கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து) தற்காலிக பட்டாசுக்கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள், வெடிபொருள் சட்டவிதிகள் 2008ன் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிகப் பட்டாசு உரிமம் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஒற்றை சாளர முறையில் (Single Window System) பெற்றிடவேண்டும் என்பதன் அடிப்படையில் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி உரிமத்தினைப் பெறுவதற்கென தங்களது விண்ணப்பத்தினை நாளை 19.09.2023 முதல் 18.10.2023 ம் தேதிக்குள் இ.சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் 18.10.2023க்குபின் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விண்ணபிக்க தேவையான ஆவணங்கள்: 1) தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ முதல் 25 சமீ. வரை உள்ளடக்கியதாகவும் புலத்தினை குறிக்கும் புலவரை படத்தில் சாலைவசதி, சுற்றுப்புறத்தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டுக்காட்டும் (Subrule-3) புலவரைபடம் (இ-சேவைமையத்தில் Scan செய்ய)
2) உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்புநிதிஆண்டில் வீட்டுவரி செலுத்திய இரசீது நகல். 3) வாடகைக் கட்டிடம் எனில், உரிமையாளர் வீட்டுவரி செலுத்திய அசல் இரசீது நகலுடன் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம்.
4) உரிய தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் உரிமக் கட்டணம் ரூ.700/--அசல் செலுத்துச் சீட்டு (இ.செலான் கணினி மையத்தில் கட்டி இ-சேவை மையத்தில் Scan செய்யவேண்டும்). 5) மனுதாரரின் மார்பளவு (பாஸ்போர்ட்) அளவுள்ள வண்ணப் புகைப்படங்கள் 1(இ.
சேவைமையத்தில் Scan செய்ய).