கோயம்புத்தூர்:வருகிற பிப்ரவரி 18அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து சிவன் கோயில்களிலும் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, இரவு முழுவதும் கண்விழித்து சாமி தரிசனம் செய்ய உள்ளனர். அந்த வகையில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்படம் உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரையை முன்னிட்டு, நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்று, முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வர உள்ள நிலையில், காவல் துறையினர் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈஷா நிறுவனம் பழங்குடி மக்களின் நிலத்தை அபகரித்தும், யானைகளின் வழித்தடத்தை மறைத்தும், நொய்யல் நதி உற்பத்தியாகின்ற இடத்தையும் ஆக்கிரமித்து சுற்றுப்புறச் சுவர்களை எழுப்பி உள்ளதாகவும்,
ஈஷா நிறுவனத்தை எதிர்த்து பழங்குடி மக்கள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து போராடி வருகின்ற சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் ஈஷாவில் நடைபெறுகின்ற மகா சிவராத்திரி நிகழ்விற்கு வருகை தருவது என்பது பழங்குடி மக்களின் மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், எனவே இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்ட ஈஷாவிற்கு குடியரசுத் தலைவர் வருவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் குடியரசுத் தலைவருக்கு தந்தி அனுப்பி உள்ளனர்.
இதனை ஒட்டி கோவையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு குடியரசுத் தலைவருக்கு தந்தி அனுப்ப வந்தவர்கள், குடியரசுத் தலைவர் ஈஷாவிற்கு வருவதை எதிர்த்து கண்டனப் பதாகைகளை ஏந்தி, அவர்களது கண்டனத்தைப் பதிவு செய்து பின்னர் தந்தி அனுப்பினர்.
இதில் தந்தை பெரியார் திராவிடர் இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், வெள்ளியங்கிரி காப்பு இயக்கம், வெள்ளியங்கிரி மலை பழங்குடி மக்கள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மேலும் திரெளபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் ஆவார்.
இதையும் படிங்க:ஈஷா யோகா மைய மகா சிவராத்திரியில் குடியரசுத் தலைவர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!