கோயம்புத்தூர்: இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு தேஜஸ் சூப்பர்சோனிக் விமானம். இந்த ஆயுதம் தாங்கிய விமானம் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக் 21 ரக விமானங்களை மாற்ற வேண்டும், உள்நாட்டிலேயே விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற திட்டத்தின்கீழ் 1983ஆம் ஆண்டு 560 கோடி ரூபாய் செலவில் போர் விமானத்தை உருவாக்கும் திட்டம் தொடங்கியது.
பின்னர் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட திட்டம், அமெரிக்காவின் தடை உள்ளிட்ட காரணங்களால் பயன்பாட்டுக்கு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
விமானப் படையில் சேர்த்தல்
இறுதியில் 2001ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியின்போது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் இந்திய விமானப்படை 40 தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது. இருப்பினும் நவீனப்படுத்துதல் மற்றும் குறைகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளால் உற்பத்தியில் தாமதமாகி 2016ஆம் ஆண்டில்தான் விமானப் படையில் சேர்க்கப்பட்டது.
இந்த விமானமானது நான்காம் தலைமுறையைச் சேர்ந்ததாகும். ஒற்றை இருக்கைக் கொண்ட அதிநவீன தேஜஸ் விமானம் 13 டன் எடை கொண்டது. 3 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்துச்செல்லும் திறன்கொண்டது. மணிக்கு 1,350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன்கொண்டது.