வருமானவரித் துறையில் வருமானவரி அலுவலர், உதவி ஆணையர், ஆணையர், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர் ராஜரத்தினம். இதுதவிர இத்துறை சார்ந்த தன்னுடைய அனுபவங்களை நூல்கள் வாயிலாகவும், கருத்தரங்குகள் வழியாகவும் சமூகத்திற்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும், சில காலம் ஒரு கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
தன்னுடைய துறையில் படிப்படியாக உயர் பொறுப்புக்கு வந்து 1985ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார், ராஜரத்தினம். வருமானவரித் துறையில் ஒரு நேர்மையான அலுவலராக, இளம் அலுவலர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியவர், ராஜரத்தினம். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இவர் அலுவலகத்திற்கு இளம் அலுவலர்களும், ஆடிட்டர்களும் ஆலோசனை கேட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இவர் எழுதிய TAX MANAGEMENT, LANDMARK CASES முதலான நூல்கள் வரியியல் துறையில் வழிகாட்டும் துருவ நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. இவர் தனது அனுபவங்களை நாள், வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி சமூகத்திற்குத் தெரியப்படுத்தினார்.
ராஜரத்தினம் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்து போராடி வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர். அவர் பதவிவகித்த காலத்தில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்தது. பெரியார் அறக்கட்டளை மீது அதிக வரி விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு வருமானவரித் துறை தீர்ப்பாயத்திடம் வந்தபோது, அத்தீர்ப்பாயத்தில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
பெரியார் செயல்பாடுகளை முழுவதுமாக அறிந்தவர் என்பதால் பெரியார் அறக்கட்டளை மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். இதனாலேயே பெரியார் அறக்கட்டளைக்கு நீதி கிடைத்தது. பெரியார் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்ட அவர், அது தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய சார்புக்கு, இடையூறு ஏற்படாத வகையில் துறை சார்ந்த தனது செயல்பாடுகளைக் கடைசிவரைக்கும் அமைத்துக் கொண்டார். எனவேதான், தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினர் பதவி தன்னைத் தேடி வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார். இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரராகத் திகழ்ந்த ராஜரத்தினம் முதுமையின் காரணத்தால் மரணமடைந்தார். அவருடைய இழப்பு பேரிழப்பே அன்றி வேறென்ன!
இதையும் படிங்க:பன்முக நாயகன் வீரேந்திர குமார் காலமானார்!