கோயம்புத்தூர்மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்து கூடலூர் நகராட்சி அமைந்துள்ளது. அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கூடலூர் நகராட்சியில், திமுகவைச் சேர்ந்த அறிவரசு என்பவர் தலைவராக உள்ளார். நகராட்சி தலைவராக பதவியேற்ற முதல் கூட்டத்தில், ‘கூடலூர் நகராட்சியில் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இலவசமாக சான்றிதழ் பெறலாம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதற்கு மக்களிடையே மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முதல் தீர்மானமாக, ‘கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும், ராணுவத்தில் பல்வேறு பணிகளில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றம்: இதன்படி ராணுவம், துணை ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களின் வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி கட்டத் தேவையில்லை என கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இந்த அறிவிப்பை நகராட்சி தலைவர் அறிவரசு தெரிவித்தார். இந்த தீர்மானத்திற்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், “மற்ற பணிகளில் உள்ளவர்கள் அடிக்கடி தங்கள் வீட்டுக்கு வந்து செல்ல முடியும். ஆனால் எல்லையில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்கள், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தங்களது வீடுகளுக்கு வந்து செல்கின்றனர்.
நாட்டுக்காக கடமை உணர்வோடு இரவு - பகல், வெயில் - மழை பாராமல் உழைக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு மதிப்பும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்கள் கூடலூர் நகராட்சிக்குள் இருந்தால் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.