கோவையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர் ரக பைக்குகள் திருடுபோவது தொடர்கதையாக இருந்தது. இருசக்கர வாகனங்களைத் திருடுபவர்களைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
நேற்று முன்தினம் இரத்தினபுரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமான 5 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில் ஐந்து பேரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், இளவரசன், பிரகாஷ், அரவிந்தன் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் ஆகிய ஐந்து பேரும் கோவையில் நிறுத்தி வைக்கப்பட்ட உயர்ரக இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்தது தெரியவந்தது.
இந்த ஐந்து பேரும் பட்டதாரி இளைஞர்கள் என்பதும் உரிய வேலை கிடைக்காததால் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இளவரசன் என்பவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலைப் பார்த்துள்ளார்.
கோவையின் முக்கிய குடியிருப்பு பகுதிகளான ரத்தினபுரி, சரவணம்பட்டி, பந்தய சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோவில் தண்ணீர் கேன் சப்ளை செய்வதுபோல் எந்த பகுதியில் நீண்ட நேரமாக விலை உயர்ந்த பைக் நிற்கிறது என இளவரசன் நோட்டமிட்டு, தஞ்சாவூரில் உள்ள தனது நண்பர்களுக்கு தகவல் அளிப்பார்.
இதனையடுத்து கோவை வரும் அவரது நண்பர்கள் இளவரசனுடன் இணைந்து இருசக்கர வாகனங்களை திருடியுள்ளனர். திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்து அதில் வரும் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
பைக்குகளை திருடிய பட்டதாரி இளைஞர்கள் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் பிரகாஷ் இக்கூட்டத்திற்கு தலைவனாக இருந்து மற்ற நான்கு பேருக்கும் பயிற்சி அளித்து அதிக விலை கொண்ட இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ஐந்து பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் வீட்டின் பாதுகாவலரை மிரட்டி கொள்ளையடித்த கும்பல்!