கோயம்புத்தூர்:கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புறப்பாடு முனையத்தில் விமான பயணிகளை கவரும் வண்ணம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடனங்களான கரகாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து, காவடி ஆட்டம் போன்றவற்றை சித்தரிக்கும் அழகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று (ஏப்ரல் 17) திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும், விமான நிலைய வளாகத்தை சுற்றிலும் சுற்றுலாத் தலங்கள் புகைப்படங்கள், மலைப் பிரதேசங்கள், அணைக்கட்டுகள், தமிழ்நாட்டின் பண்டைய கால கோயில்கள் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாலாங்குளம் குளத்தில் விரைவில் படகு சவாரி:இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், "கோவை சர்வதேச விமான நிலையத்தில் பாரம்பரிய நடனங்கள், மலைப் பிரதேசங்கள், பழங்கால கோயில்கள் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஆழியாறு, மேகமலை, வால்பாறை, மருதமலை ஆகிய இடங்களின் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.