தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசியக் கல்வி கொள்கையால் மட்டுமே இலக்கை அடைய முடியும் - ஆளுநர் ஆர்.என். ரவி - Dr Krishnaswamy School

தேசியக் கல்வி கொள்கையால் மட்டுமே சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் உள்ளிட்டோரின் கனவுகளை நிறைவேற்றி பிரதமரின் இலக்கை அடைய முடியும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தேசியக் கல்வி கொள்கையால் மட்டுமே இலக்கை அடைய முடியும் - ஆளுநர் பேச்சு!
தேசியக் கல்வி கொள்கையால் மட்டுமே இலக்கை அடைய முடியும் - ஆளுநர் பேச்சு!

By

Published : Jan 31, 2023, 7:52 AM IST

கோயம்புத்தூர்: திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்வில், பள்ளியின் நிறுவனத் தலைவரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியோடு இணைந்து, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரோபோடிக் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தினை ஆளுநர் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இன்று மிகவும் சிறப்பான ஒரு நாளாகும். மகாத்மா காந்தியின் நினைவு தினம். இந்நன்னாளில் அவருக்கு இத்தருணத்தில் மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன்.

மெக்காலே கல்வி முறை: மகாத்மா காந்தியடிகளை போல பலரும் இந்த நாட்டின் விடுதலைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்களை நினைத்து பார்க்க வேண்டும். மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், ரிஷி அரவிந்தர் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரது கனவுகளை நினைவாக்குவதில் இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய பங்குள்ளது.

கல்வி நிறுவனங்கள் இதனை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் அவர்களை உருவாக்க வேண்டும். நான் இதுபோன்று பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு இளம் மாணவர்களை சந்திப்பதில் ஆர்வமாக இருப்பேன். இந்தியாவின் வருங்காலம் இவர்கள் கையில் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

இந்த பள்ளி மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதாக தெரிந்து கொண்டேன். அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. இன்றைய போட்டி நிறைந்த உலகில் எந்த விதத்திலும் யாரும் பின்தங்கி இருக்கக் கூடாது. அவ்வாறு பின் தங்குபவர்களுக்காக யாரும் கவலை கொள்வதில்லை.

எனவே இளம் தலைமுறையினர் தொழில்நுட்ப அறிவிலும், கல்வியிலும் முன்னணியில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்திற்கு பிறகு, கடந்த 70 ஆண்டுகளாக மெக்காலே உருவாக்கிய காலனி தாக்கம் நிறைந்த கல்வி முறையை பின்பற்றி வந்தோம்.

வாசிக்க வைத்து, படிக்க வைத்து, தேர்வு எழுத வைக்கிறதே தவிர, வேலை பெற்றவர்களாக அவர்களை உருவாக்குவதில்லை. கல்வி என்பது ஒருவரைக் காப்பாற்றுவது. ஒருவரது குடும்பத்தை காப்பாற்றுவது மட்டுமின்றி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு முன்பு 60 மற்றும் 80களில் இரு முறை தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அவை முந்தைய காலனி தாக்கம் கொண்ட கல்வி முறையில் சிறிதளவு மாற்றங்களை மட்டும் கொண்டு வந்ததே தவிர, மிகப்பெரிய முன்னேற்றத்தை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், ரிஷி அரவிந்தர், மகாகவி பாரதியார் ஆகியோரது கனவு இது இல்லை. இதனால் உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கப் பெறவில்லை. சமீபத்திய காலமாகதான் சர்வதேச அரங்கில் இந்தியா முக்கிய நாடாக கருதப்படுகிறது.

இழந்த நமது பெருமையையும், தன்னம்பிக்கையும், மரியாதையையும், கல்வி அறிவையும் மீட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் இந்தியாவை பார்க்கும் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உருவாக்கப்படும் அமைப்புகளில் இந்தியாவின் பங்கும், இருப்பும் முக்கியமாகியுள்ளது.

ஜி 20 மாநாட்டினை இந்தியா தலைமை தாங்கி நடத்துவது இந்தியாவிற்கு பெருமையை சேர்த்துள்ளது. உலகில் சக்தி வாய்ந்த சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்பட 20 நாடுகளை ஒருங்கிணைத்து ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவது பெருமையாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் இந்த சூழலில், இந்தியா உலக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முன்னெடுப்புகள் ஆகும். இந்தியாவிற்கான இலக்கை சரியாக நிர்ணயித்து, அதனை நோக்கி இந்தியாவை செலுத்தி வருகிறார். உலக நாடுகளின் தலைமையாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய கனவை நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

நமது நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், அறிவாளிகளும் பிற நாடுகளுக்குச் சென்று குடி பெயர்ந்த சூழலில், தற்போது அவர்கள் இந்தியாவின் பெருமையை நினைத்து, இந்தியாவின் வளர்ச்சியை நினைத்து பெருமை கொள்கின்றனர். நமது நாடு முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லை என அவர்கள் கருதுகின்றனர்.

கரோனா தடுப்பில் இந்தியாவின் பங்கு: கரோனா தொற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டபோது, இந்தியா மட்டுமே கோவிட் தடுப்பூசிகளை, மருந்துகளை, உணவுகளை பிற நாடுகளுக்கு அதிக அளவில் வழங்கி உதவியது. கோவிட் தடுப்பூசிகளை பிற நாடுகள் விலை உயர்த்தி விற்று வந்தபோது, ஏழை மக்களுக்காக இலவசமாக இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

120க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் இருந்து கோவிட் தடுப்பூசியை பெற்று பயனடைந்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் சூழலின்போது, உலகமே இரண்டு துண்டுகளாக பிரிந்து இருந்தபோது, இந்தியா நடுநிலை வகித்து கருத்துகளை தெரிவித்தது. இந்தியாவின் கருத்துகளை கேட்க இரு நாடுகளும் தயாராகவே இருந்தன.

மேலும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்து, அந்தந்த நாடுகளில் இருந்த இந்திய மாணவர்களை பத்திரமாக தாய்நாட்டிற்கு மீட்டுக் கொண்டு வர முடிந்தது. தற்போது நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சர்வதேச அரங்கில் இந்தியா வளர்ச்சிக்காக வழிகாட்டும் என பிற நாடுகள் நம்புகின்றன.

உலகத்தில் மிகப் பெரும் பிரச்னையாக வறுமை இருந்து கொண்டிருக்கும்போது, பல நாடுகள் உணவை வீணாக்கிக் கொண்டிருக்கின்றன. எனவே சர்வதேச வளர்ச்சிக்கான பாதையை இந்தியா வகுக்க உள்ளது. இதில் இந்தியர்கள் ஒவ்வொருவருடைய பங்கும் முக்கியமானது.

முக்கிய திட்டங்கள்: நமது தொழில்நுட்பம், பொருளாதாரத்தை ஒருங்கிணைத்து 'வாசுதேவ குடும்பம்' - உலகமே ஒரு குடும்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்தியா முன்னேறிச் சென்று வருகிறது. இதுவே 1,000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள இந்தியாவின் கலாச்சாரமாகும்.

2047ஆம் ஆண்டில் இந்தியாவின் 100வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, இந்தியா உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இருக்க வேண்டும் என பிரதமர் குறிக்கோள் வைத்துள்ளார். அதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்திய நாட்டின் இந்த வளர்ச்சியை நாம் காணும் காலத்தில் இருப்பதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்தியாவை முன்னேற்றுவதற்காக ஒரு செயலை நாம் செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்த திறந்தவெளி கழிப்பறைகள், இன்று முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. தற்போதைய பிரதமரின் ஆட்சி காலம் என்பது, அரசை சார்ந்து மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, மக்களால் நடத்தப்படும் அரசாகவே இந்த அரசு உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இன்று 1,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இளைஞர்களால் நிறுவப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்களை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்தியாவில் புதிய நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே குடும்பமாக பார்க்கப்படுகிறது. முந்தைய காலகட்டத்தில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி இருந்தாலும், அவை அனைத்துமே ஐந்தாண்டு கால அரசியல் திட்டமாகவே இருந்தன. எதிர்காலத்திற்கான குறிக்கோளை உடைய அரசாக தற்போதைய அரசு உள்ளது.

உதாரணமாக, தமிழ்நாடு இந்திய அளவில் வளர்ந்த மாநிலமாகவே உள்ளது. ஆனால் அதன் மண்டல வளர்ச்சியை பார்க்கும்போது, சரிசம விகிதம் இருப்பதில்லை. தெற்கு ,மேற்கு, கிழக்கு, வடக்கு ஆகியவற்றின் வளர்ச்சியில் சரிசம நிலை இல்லை. ஆனால் தற்போது தமிழ்நாடு, திரிபுரா என எந்த மாநில பேதமும் இன்றி மருத்துவம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், எரிசக்தி என அனைத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் முன்னேற்றம்: 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டை தரும் ஆயுஸ்மான் பாரத் திட்டம், அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள்தான் இந்தியா ஒரே குடும்பம் என உணர்த்த வைக்கிறது. மொழியாகவும், மதமாகவும், இனமாகவும் பிரிந்து இருந்ததால் அரசியல் கட்சியினர் லாபம் அடைந்தனர்.

நாடும் பின்னோக்கிச் சென்றது. தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பாலின பேதம் தகர்க்கப்பட்டு, ராணுவம் உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண்களுக்கான சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு சிறப்பாக வழங்கப்படுகிறது.

சமீபத்திய சென்செக்ஸ் முடிவுகள் இன்னும் வெளியாகாதபோதும், அதன் ஆய்வுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. இது மகிழ்ச்சிக்குரிய தகவலாகும். தமிழ்நாட்டிலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய வாக்காளர் பட்டியலில், ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா தலைசிறந்த நாடாக உருவாகும் சூழலில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக கூறுகளையும் இழந்து விடாமல், அதற்கு மதிப்பளித்து அதனை போற்றும் வகையில் நாம் வளர்ந்திருக்க வேண்டும். அந்த வகையில் கலாச்சார கூறுகளை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளுவர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என பலரும் சங்க இலக்கியத்தை பாதுகாத்து நமது பாரம்பரியமிக்க கலாச்சார பண்பாடுகளை பாதுகாத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது' என்றார்.

இதையும் படிங்க:அண்ணாமலை கீழ் செயல்படும் வார் ரூம் மீது நடிகை காயத்ரி ரகுராம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details