தமிழ்நாட்டிலிருந்து கோயம்புத்தூர் வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநில போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று (நவ. 04) பிற்பகல் தமிழ்நாடு எல்லையை அடுத்த வாளையாறு பகுதியில் கேரள மாநில காவல் துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெய் ஸ்ரீராம் என்று பெயர் பொறிக்கப்பட்ட, தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், சோதனை செய்தபோது, அதில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஆட்டோவில் வந்த மூன்று பேரைப் பிடித்த கேரள காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசீலன், காதர், ஈரோட்டைச் சேர்ந்த கேசவன் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் ஈரோட்டிலிருந்து கோவை வழியாக ஆட்டோ மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூன்று பேரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 60 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூவர் தேனி, கம்பம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சாவை, ஈரோட்டில் வைத்து பேக்கிங் செய்து கேரளாவிற்குள் கொண்டுவந்திருப்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகன் கைது!