கோயம்புத்தூர்: நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குழந்தைகளை உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல பாரத பிரதமர் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளார். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு நாம் பாடுபடுவோம். சிபிஎஸ்சி பாடத்திட்டம் குழந்தைகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.
புதுச்சேரியை பொருத்தமட்டில் தமிழ் வழி பாட கல்வி, மலையாள பாட கல்வி, தெலுங்கு வழி பாட கல்வி என மூன்று விதமாக பாடக் கல்வி உள்ளது. ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சிபிஎஸ்சி கல்வித் திட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தமிழ் படிப்பதைத் தமிழிசை தடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார், அதை நான் வன்மையாக மறுக்கிறேன்.