கோயம்புத்தூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு மதம் சார்ந்த படங்கள் வைக்கக்கூடாது எனவும், ஒருவேளை வைத்திருந்தால் எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கூறியுள்ளார். படங்களை எடுத்தால்தான் பிரச்னை வரும்.
தற்போது அரசு அதிகாரிகள் எல்லாம் இப்படி பேசினால்தான் இந்த அரசுக்குப் பிடிக்கும் என பேச ஆரம்பித்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக மதம் சார்ந்த உணர்வுகளை ஒதுக்குவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தமிழக அரசு இதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.
லியோ திரைப்பட விவகாரம் பெரிதாகி வருகிறது. பொதுவாக, எந்த நடிகர்கள் நடித்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும், ஒரே மாதிரியான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும், சில அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்குதான் திரையிட முடிந்தது. இந்த அழுத்தம் தூய தமிழில் 'ரெட் ஜெயன்ட்' என்னும் பெயர் வைத்து நடத்தும் நிறுவனத்தால்தான் பிரச்னை என நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். அப்படியென்றால், சினிமாவை சினிமாவாகத்தானே பார்க்க வேண்டும். ஆகவே சுதந்திரமான ஒரு சூழ்நிலை நிலவ வேண்டும்" என்று கூறினார்.