பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்றால் கல்வியறிவு அடிப்படை, அவர்கள் கல்வி கற்றாலொழிய சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படாது என்று கூறுகிறார் பெரியார். இந்தியாவில் பட்டியலின மக்களே அதிகளவு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்; ஆனால், அவர்களை விட அனைத்து விதத்திலும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது பெண்களே என்கிறார் அம்பேத்கர். இதன் மூலமே பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என நமக்குப் புலப்படும்.
இந்தியாவில் சாதி கட்டமைப்புகள், ஆணாதிக்கம், பொருளாதாரம் எனப் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி ஒரு பெண் கல்வியறிவைப் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அதேவேளையில், அத்துறையில் சாதிப்பது என்பது ஒருநாள் இரவில் செய்யக்கூடியதும் அல்ல. அதற்கு அதீத முயற்சியும் நம்பிக்கையும் தேவை. இவ்வாறு தன் கண்முன் நின்று அச்சுறுத்திய பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து கேரள மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில் சாதித்துக் காட்டியுள்ளார் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவர்.
பல ஆண்டுகாலமாக பெரும்பாலான மலைவாழ் மக்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கின்றனர். சமீப காலமாகத்தான் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கல்வி கற்க வெளியில் வருகின்றனர். அதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பட்டப்படிப்புக்கும், அரசு வேலைகளுக்கும் செல்கின்றனர்.
சாதிச் சான்றிதழ், ஓட்டுரிமை, தெரு விளக்கு, கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்தான் இன்னமும் தங்களின் வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர். குடியிருக்க நல்ல வீடு கூட இல்லாத இவர்களையோ அரசாங்கம் கடைக்கண் பார்வையால் கூட பார்ப்பதில்லை.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால்பாறையில் பாரம்பரியமாக மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள 36 கிராமங்களில் காடர், முதுவர், மலை மலசர், மலசர், இரவாளர் இன மக்கள் இருக்கின்றனர். இக்கிராமங்களில் மலைவாழ் மக்களின் கருமுட்டிகிராமமும் ஒன்றாகும். இக்கிராமத்தில் 65 குடும்பங்கள் உள்ளன. அதில் 45 குழந்தைகள் படித்துவருகின்றனர்.
படிப்பு, வேலைவாய்ப்பு ஏன் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கக் கூட இவர்கள் மலைப்பகுதியிலிருந்து கீழே வரும் நிலை இப்போதும் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு பின்புலத்திருந்துதான் சுமார் 100 கி.மீ. கடந்து 10ஆம் வகுப்பில் 95 விழுக்காடுக்கு மேல் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார் மாணவி ஸ்ரீதேவி.
இவரின் தந்தை விவசாயி செல்லமுத்து, ஸ்ரீதேவியை கேரள மாநிலம் சாலக்குடியிலுள்ள தனியார் பள்ளியில் தங்கி 10ஆம் வகுப்பு படிக்கவைத்துள்ளார். கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் வீட்டுக்கு வர இயலாத சூழலில், தேர்வு மையத்துக்கு அருகிலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். வீட்டுக்குச் செல்ல முடியாத நெருக்கடியான சூழல் ஒருபுறம் வாட்டினாலும், தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதிக்க வேண்டும் என்ற திண்ணிய எண்ணத்துடன் படிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
அதன்படி, அனைத்துத் தேர்வுகளையும் எழுதிமுடித்த ஸ்ரீதேவிக்கோ, சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் இருந்துகொண்டே வந்துள்ளது. இச்சூழலில், அவரின் கோரிக்கையை ஏற்று, கேரள அரசின் சுகாதார துறைப் பணியாளர்கள் தனி வாகனம் மூலம் வால்பாறை சோதனைச் சாவடிக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.