கோவை:இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கியுள்ள "தி கேரளா ஸ்டோரி" என்ற இந்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதப் பெண்கள் இஸ்லாமிற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, பிறகு தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இப்படத்திற்குத் தடை விதிக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் இன்று(மே.5) நாடு முழுவதும் வெளியானது. இப்படம் வெளியாவதை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக இத்திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள வணிக வளாகங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளைச் சுற்றிலும் போலீசார் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.