கோயம்புத்தூர்மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இன்று (டிச.28) காலை முதல் கோவையில் ஐந்து இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இறுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் சமீரன், உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அருண்குமார், காந்திராஜன், சரஸ்வதி, சிந்தனை செல்வன், கலைவாணன், வேல்முருகன் மற்றும் கோவை மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம்
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வபெருந்தகை "2016 மற்றும் 2017 ஆண்டு கோவை மாநகராட்சியில் ரூ.77 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது பற்றி விளக்கி உள்ளோம். எதிர்பார்த்த 79 விழுக்காட்டில் 39 விழுக்காடு மட்டுமே எட்டப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம்
மலைவாழ் மக்கள் வாழ்கின்ற பகுதியில் வசிக்கும் மக்களிடம் ஆய்வு மேற்கொண்ட பொழுது ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, அதனை அடுத்த மாதத்திலிருந்து தடுக்கும் பொருட்டு நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் உள்ளது
கோவை வேளாண் கல்லூரியில் ஆய்வக கருவிகள் குறைவாக இருப்பதாகவும் 600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.12 கோடியில் பல்வேறு கருவிகள் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். ஆனால், அதனைப் பயன்படுத்துவதற்குக் கட்டடங்கள் இல்லாமல் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போட்டுள்ளார்கள்.
கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள சில சாய்வு படுக்கைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும், அங்கு பல்வேறு வருந்தத்தக்கச் செய்திகள் உள்ளன அவற்றை எல்லாம் சரிசெய்யப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சாலை வசதிகள் இல்லாத மலைவாழ் கிராமங்கள்
பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட தற்போது ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை ரூ.5 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் ரோப்வால்(தடுப்பு வேலி) அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளோம். வனவிலங்கு தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புகள் வழங்கப்படும் நிவாரணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. அதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். சாலை வசதிகள் இல்லாத வனம் மற்றும் மலைவாழ் கிராமங்களுக்குச் சாலை வசதிகளை ஏற்படுத்தப் பரிந்துரை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Rajini Twitter Post: 'ஆஹா... பிரமாதம்!'; '83' படக்குழுவை புகழ்ந்த ரஜினிகாந்த்!