கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்தல், மின்சார நிலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறுதல், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை நிறைவேற்ற வலியுறுத்தி (செப்.25-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக தொழில்துறை அமைப்புகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கடந்த (செ.23) மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால், பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை என்று கூறி தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது கோரிக்கையை ஆவணம் செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு தொழில் அமைப்பினர் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து, லகு உத்யோக் பாரதி மாநில தலைவர் சிவகுமார் கூறுகையில், "சிறு, குறு தொழில் மின் நுகர்வோர்களுக்கு Tariff 3A(1) மின் இணைப்பு அளிக்க வேண்டும். தாழ் வழுத்த மின் கட்டணங்களுக்கு 0-12 கிலோவாட் வரை ரூபாய் 20, 112-150 கிலோவாட் வரை ரூபாய் 350 பெற வேண்டும். உயர் மின்னழுத்த பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கட்டணம் தற்பொழுது ரூபாய் 562 வசூலிக்கப்படும் நிலையில் அதனை முந்தைய கட்டணமான ரூபாய் 350ஆகக் குறைக்கப்பட வேண்டும்.