கோவை:கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்நிலைத் திடலில் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ராமரின் புன்னிய பூமியில் இருந்து நான் வந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான கலைஞர்கள் சேர்ந்து டெக்ஸ்டைல் சிட்டி என்ற இந்த கோவை மண்ணை உருவாக்கியுள்ளனர். பலரும் இங்கு கல்வித்தரத்தை மேம்படுத்த பாடுபட்டிருக்கிறார்கள். ராமர் ஆலய கட்டுமானத்திற்காக தமிழ்நாடு சார்பில் ரூ. 120 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்குமான வளர்ச்சி என்பது நமது தாரக மந்திரம். தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணி புதிய விடியலை நோக்கிச் செல்கிறது. தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ள மோடியை எண்ணிப்பார்க்கவேண்டும். பிரதமர் மோடி பல திட்டங்களை கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கியுள்ளார். இலவச கேஸ், வீடு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 54 லட்சம் கழிப்பறைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கட்டிக்கொடுத்துள்ளது.