தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு சார்பில் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் கூறியதாவது, "மின்வாரியத்தில் உதவியாளர் பணியிடங்களில் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன. வாரியங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஐந்தாயிரத்து 439இல் தற்போது 482 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறோம். இதனால் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடிவதில்லை. 70 விழுக்காடு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக 45 முதல் 50 விழுக்காடு மின்சார குறைபாடுகள் சரிசெய்ய முடியாமல் மின்வாரிய பிரிவுகள் தடுமாறிவருகின்றன.
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பின் பொது செயலாளர் இருக்கின்ற தொழிலாளர்களைக் கொண்டு வேலை செய்யும்பொழுது விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறான விபத்து, உயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்காதபட்சத்தில் போராட்டங்கள் போன்றவை நடைபெறுகின்றன. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்களின் அழைப்புகள் பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை தருகின்றன. இதனால் பொதுமக்களுடன் அவ்வப்போது வாக்குவாதமும் நிகழ்கிறது.
மின்வாரிய தலைவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உயர் அலுவலர்களிடமும் அமைச்சர்களிடமும் இது குறித்து கூறப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆள்களை பணி நியமனம் செய்வதில் நீதிமன்ற தடை உள்ளது, எனினும் இந்தத் தடையை நீக்க வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுகிறேன்.
நாளை (நவம்பர் 17) திருப்பூர், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் மேற்பார்வையாளர்கள் கூட்டத்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்த இருக்கிறேன்" எனக் கூறினார்.