கோயம்புத்தூர்: கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுவதாகவும் ஜனநாயக விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை ஜெயிலில் வைப்பேன் என தெரிவித்த ஸ்டாலின் தற்போது வருத்தப்படுகிறார். செந்தில் பாலாஜியும், அவரது தம்பியும் கரூரை கைக்குள் வைத்திருந்தனர் என சாடிய அவர் எமர்ஜென்சி காலத்தில் ஒன்றரை வருஷத்திற்கு கட்சி வேட்டி கட்டாதவர்கள் திமுகவினர் என தெரிவித்தார்.
மேலும், “பாஜகவைச் சீண்ட வேண்டாம், சீண்டினால் அதற்கான பலனாக தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பதை விட அதிகமாக அனுபவிக்க நேரிடும். அரசியலமைப்பு சட்ட 164 யின் படி ஆளுநர் தான் முதல்வரின் அறிவுறுத்தலின் படி அமைச்சர்களை நியமிப்பார். அதேபோல் ஆளுநர் நினைத்தால் அமைச்சரை நீக்கவும் சட்டம் உள்ளது”, எனவும் கூறினார்.
பாஜக சூர்யாவைக் கைது செய்ததற்குக் கண்டனம் தெரிவித்த அவர், "சூர்யா சொன்னதில் என்ன தவறு உள்ளது? அவர் சொன்ன சம்பவம் உண்மை தான். திருமாவளவன் தீய சக்தி. டிஜிபிக்கு சட்டப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எஜமான் சொல்வதைக் கேட்கிறார். டி.ஜி.பி., செய்தது அராஜகமான செயல்", என்றார்.
மேலும் அவர், “திமுகவிற்கு அழிவு ஆரம்பம், சிறைக்குச் சென்றதில் செந்தில் பாலாஜி முதல் நபர், திமுகவில் ஊழல் செய்த அத்தனை பேரும் சிறைக்குப் போவீர்கள். இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆட்சி ஓடும் என உறுதியளிக்க முடியாது, மோசமான சூழல் தமிழகத்தில் உள்ளது. இந்த மோசமான ஆட்சியை மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவது தமிழகத்திற்கு நல்லது.”, எனவும் தெரிவித்தார்.
டாஸ்மாக்கில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது தொடர்பாக ஊழல் நடைபெறுகிறது என நிரூபித்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த அவர் “செந்தில் பாலாஜியைக் காண சபரீசன் ஏன் செல்ல வேண்டும்? அவருக்கு என்ன தொடர்பு? தங்களுடனான தொடர்பைச் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் செந்தில் பாலாஜியை பார்பதற்கு இரவோடு இரவாக ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஓடுகிறார்கள். அரசியல் தொடர்பு இல்லாத சபரீசன் செந்தில் பாலாஜியை கான சென்றதற்கான விழக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கொடுக்க வேண்டும்?”,எனவும் தெரிவித்தார்.