கோயம்புத்தூர்:கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"டிஐஜி விஜயகுமார் தற்பொழுது நம்முடன் இல்லை என்ற செய்தி அனைவரின் மத்தியில் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே காவல்துறையில் நானும் ஒன்பது ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன் என்று நினைக்கின்ற போது எனக்கு துக்கம் இன்னும் அதிகமாக உள்ளது என்றார்.
மேலும், விஜயகுமார் மீது பாஜகவினர், இப்பகுதி மக்கள், மாற்றுக் கட்சியினர் என அனைவரும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு மிகவும் நெருங்கிய அதிகாரியாக பணிபுரிந்துள்ளார் எனப் பலரும் கூறுகிறார்கள். தற்பொழுது வேறு மாநிலங்களில் நடப்பது தமிழகத்திற்குள்ளும் நடக்க துவங்கி உள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவில் Suicide by Officers பார்த்திருப்போம். குறிப்பாக நார்ஜன் பகுதியில் அதிகாரிகள் அவர்களது துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொள்வதை பார்க்கலாம்.
தற்போது தமிழகத்தில் முதன்முறையாக இதனை பார்க்கிறோம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட பொதுப்படையான காரணங்களை நாங்கள் முன் வைக்கிறோம் என தெரிவித்தார். காவல்துறையில் இருக்கக்கூடிய பணி அழுத்தம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவை காரணங்களாக இருக்கும். காவல்துறையை முதலில் சீரமைக்க வேண்டும் என்றார்.
உச்சநீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய சில முக்கியமான விஷயங்களை தீர்ப்பாக அளித்துள்ளதை தமிழக அரசு குழு அமைத்து அதனை மேம்படுத்த வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது, காவலர்கள் பணி செய்யும் இடங்களில் அடிப்படை தேவைகள் இருக்க வேண்டும்.போக்குவரத்து வசதிகள், கழிவறை வசதிகள், ஏற்படுத்தி தர வேண்டும். கட்டாயமாக வார விடுமுறை ஒரு நாள் அளிக்க வேண்டும்.