கோயம்புத்தூர்:சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வன பயிற்சி கல்லூரி மற்றும் வனத்துறை வளாகத்தில் உள்ள வனமரபியல் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 6) ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகை விதைகளை பார்வையிட்ட அவர், நீலகிரி வரையாடு திட்டத்துக்காக அலுவலகம் அமைக்கப்பட உள்ள கட்டடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார்.
இதனையடுத்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய சுப்ரியா சாஹூ, “தமிழ்நாடு மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘நீலகிரி தார்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதற்கான அலுவலகம், தற்காலிகமாக கோவையில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் திட்ட இயக்குநர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த அலுவலகம் விரைவில் திறக்கப்படும். நமது மாநில விலங்கை பாதுகாப்பதுடன், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது வனத்துறையின் முக்கிய கடமை ஆகும். இதற்காகத்தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வாழ்விடங்கள் மீட்கப்படும். நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை குறைந்து போனதற்கு என்ன காரணம் மற்றும் அதன் வாழ்விடங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பின்னர் அதன் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால், உடனடியாக அவை மீட்டெடுக்கப்படும். இந்த திட்டம் நமது நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விலங்கு, புற்களை மட்டும்தான் அதிகளவில் விரும்பிச் சாப்பிடும். எனவே, இவற்றின் வாழ்விடங்களில் வளர்ந்து இருக்கும் அந்நிய வகை தாவரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, புற்கள் வளர்க்கப்படும்.