கோயம்புத்தூர்: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி நவம்பர் 11ஆம் தேதி அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இதற்குக் காரணம் மாணவி முன்பு படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, இந்த விஷயம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர்தான் எனப் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பள்ளி மாணவி தற்கொலை முதல் தகனம் வரை
நவம்பர் 11: மாணவியின் நண்பர், தந்தை ஆகியோர் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், யாரையும் சும்மா விடக் கூடாது எனவும், பக்கத்து வீட்டு முதியவர், தனது தோழியின் தந்தை, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டும் இருந்தார்.
போராட்டம் தீவிரமடைந்தது
நவம்பர் 12:இதனையடுத்து உக்கடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர். இயற்பியல் ஆசிரியரைத் தேடத் தொடங்கினர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இந்த விவகாரம் தீவிரமடைந்தது.
மிதுன் சக்கரவர்த்தி கைது
அன்று மாலை மிதுன் சக்ரவர்த்தி ஆர்.எஸ். புரம் மகளிர் காவல் துறையினரால் (முன்னதாக வழக்கு உக்கடம் காவல் நிலையத்திலிருந்து மாற்றப்பட்டது) கைதுசெய்யப்படுகிறார். அவர் மீது போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படுகிறார். முன்னதாக ஆஜர்படுத்தப்பட்டபோது 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்கள் போராட்டம்
நவம்பர் 13:மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு செய்யும்கட்டடம் முன்பு கறுப்பு உடை அணிந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், மாணவியின் இல்லம் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மாதர் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகள் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2 தனிப்படைகள்
அங்கு நேரில் சென்ற காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன், சம்பவம் குறித்துத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் போக்சோ சட்டத்தில் குற்றவாளியாகச் சேர்க்கப்படுவதாகவும், அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேட்டி அளிக்கிறார். இதனையடுத்து, மாலை பள்ளி நிர்வாகம் மூலம் மீரா ஜாக்சன் பள்ளி முதல்வர் பொறுப்பிலிருந்து விலக்கப்படுகிறார்.
மீரா ஜாக்சனை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தி மீண்டும் போராட்டம் தீவிரமடைகிறது. கோவை உக்கடம் பகுதியில் மாணவர்கள் பலரும் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.