மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த அகில இந்திய மாணவர்கள் சங்க மாணவர்கள் கல்லூரி வாயில் முன் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ' இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறு' என்ற பதாகையை ஏந்தியவாறு, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டம் பின் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாணவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ், ' 1955ஆம் ஆண்டு மத அடிப்படையில் மக்களை பிரிக்கக் கூடாது என குடியுரிமை சட்டம் உள்ளது. ஆனால், மத்திய அரசு தற்போது கொண்டு வந்த திருத்தச் சட்டத்தில் மத ரீதியில் மக்களைப் பிரிக்கலாம் என்றும் உள்ளது. இந்த மசோதாவில் இலங்கைத் தமிழர் பிரச்னைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. மதச்சார்பின்மை உள்ள இந்தியாவில் இது போன்ற சட்டம் மிக தவறான ஒன்று. இதனால் பல பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும். இல்லையனில் மாணவர்கள் போராட்டம் தொடரும்' என்றார்.
இதையும் படிங்க : அமித் ஷா படத்தை எரித்த மாணவர்கள்: அத்துமீறி நுழைந்த பாஜகவினர்... துரத்திப் பிடித்த காவல் துறை...!