கோவை:விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தியது, 1,000 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தும் கூடுதல் யூனிட்க்கு உயர்த்தப்பட்ட கட்டணத்ததில் 70 காசுகள் குறைப்பு, கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும் ஆடை உற்பத்தி நெசவாளர்களுக்கு உதவி செய்வதை எனது கடமையாக கருதுகிறேன். திமுக துவங்கிய காலம் முதல் நெசவாளர் துயர் துடைக்கும் இயக்கமாக இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவி செய்துள்ளது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று, நூல் விலையேற்றம் என்ற தாக்குதலில் சிக்கி இருந்த நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தது. நெசவாளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். சிறந்த நெசவாளர், சிறந்த ஏற்றுமதியாளர், சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி, கைவினைப் பொருட்கள் காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வேட்டி , சேலை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இவை எல்லாம் 20 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தான். மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர். செந்தில்பாலாஜி ஒரு டார்கெட் அமைச்சர். தனக்கான இலக்கை உருவாக்கி கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் அந்த இலக்கை அடைந்து காட்டுவார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா மின்சாரம் கைத்தறிகளுக்கு 300 அலகுகளாகவும், விசைத்தறிகளுக்கு 1000 அலகுகளாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.53 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும். இதை செலவாக நினைக்கவில்லை. நெசவாளர்கள் புத்துயிர் பெறவும், அதிகமாக உற்பத்தி செய்யவும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மின் கட்டண குறைப்பால் நெசவாளர்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.தொழிலை வளர்ச்சியடைய செய்யும் முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. 5 லட்சம் விசைத்தறிகளில் பணியாற்றும் 10 லட்சம் தொழிலாளர்களை காக்கும் கடமை அரசிற்கு உண்டு.