கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து ஆனைமலை அருகே உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடியை அதிகளவில் செய்துவருகின்றனர். ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 6,400 ஏக்கரில் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு உரிய நேரத்தில் மழை பெய்யாததால் முதல் போக சாகுபடியை விவசாயிகள் தாமதமாக தொடங்கினர்.
நாத்து நடும் கிராமத்து பெண்கள் கடந்த இரண்டு வாரங்கருக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கடந்த 18ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நெல் விவசாயிகள் தங்கள் வயலில் நெல் சாகுபடிக்கு தயாராகி தண்ணீரை நிரப்பி உழவு இயந்திரம் மூலம் பதப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டிவந்தனர். தொடர்ந்து இன்று வயலில் முதல் போக சாகுபடிக்காக நெற்பயிர் நடவு செய்யும் பணி தொடங்கியது.
முதல் போக சம்பா நெல் சாகுபடி இன்று காலை முதலே வயலில் இறங்கி பெண்கள் கிராமிய பாடல் பாடியவாறு சோர்வில்லாமல் வயலில் நடவு செய்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இன்று நடவு செய்யும் நெற்பயிர் 120 நாட்களில் கழித்து அறுவடை செய்யப்பட்டு அரசு கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பப்படும்.
இதேபோல், மழை பெய்து ஆழியார் அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவந்தால் சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.