தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரிடம் கோரிக்கைகள் வைத்த ஸ்டாலின்: கோவை எம்பி வரவேற்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை: நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அவ்வாறு பிரதமரிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளை கோவை எம்பி பி..ஆர். நடராஜன் வரவேற்றுள்ளார்.

பிரதமரிடம் கோரிக்கைகள் வைத்த ஸ்டாலின்: கோவை எம்பி வரவேற்பு
பிரதமரிடம் கோரிக்கைகள் வைத்த ஸ்டாலின்: கோவை எம்பி வரவேற்பு

By

Published : Jun 18, 2021, 6:51 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு மண்டலத்தின் மையமாக கோவை மாவட்டம் உள்ளது. மருத்துவ கேந்திரமான மாவட்டமாகவும் கோவை திகழ்கிறது. இங்கு கோவை மட்டுமல்லாது திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்குத் தேவையான முக்கியமான கோரிக்கைகள் குறித்த பட்டியலை அளித்து வலியுறுத்தியுள்ளார். இதில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தலும் முக்கியமானது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இத்தொற்றினால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுவந்தனர். கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தொற்று மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து சுமார் ஒரு மாத காலத்திற்குள்ளாகத் தீவிரமான நடவடிக்கையின் காரணமாக தற்போது இத்தொற்று மிகக் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்குப் பிரதானமாக மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியதே முக்கியமான காரணமாகும்.

இதனிடையே மூன்றாவது அலை வரும்; இதற்கான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கும் முனைப்பில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்பது அனைவரின் கவனத்தை ஈர்த்த ஒன்று என்பது அரசியல் எதிரிகள்கூட மறுக்க இயலாத ஒன்றாகும்.

அந்தவகையில் திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் இதற்கான நடைமுறைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது உள்ளபடியே மகிழ்வை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என இந்திய ஒன்றியத்தின் பிரதம அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இதனை கோவை மாவட்ட மக்களின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையின் நியாயத்தை ஒன்றிய அரசு உணர்ந்து உடனடியாக அதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இக்கோரிக்கையை வலுப்படுத்த நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்பதை மு.க.ஸ்டாலினுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details