கோயம்புத்தூர்:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது, கல்வி உள்பட பத்து திட்டங்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டித் தரப்படும் என்றும், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் வீடு கட்டித் தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், கோயம்புத்தூர் பூலுவபட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 302 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், புதிதாக திருமணமானவர்கள் உள்பட 320 பேருக்கு புதிய வீடுகள் கட்டித்தர அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும், அரசுத்துறை சார்பில் தற்போது வீடு கட்டுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், பூலுவபட்டி இலங்கைத் தமிழர்கள், தமிழகம் முழுவதும் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு எப்படி வீடுகள் கட்டித் தரப்படுகிறதோ, அதே மாதிரி தங்களுக்கும் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து மனு அளித்தனர்.