கோவை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவை ஸ்மார்ட்சிட்டி வாளாங்குளம் படகு இல்லம் மற்றும் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், படகு இல்லத்தில் கூடுதல் வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ராமச்சந்திரன், "சுற்றுலாத் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு அளவிற்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கிடையாது. தமிழ்நாட்டில் கோயில்கள் அதிகம் உள்ள காரணத்தால் ஆன்மிகச் சுற்றுலா அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் கட்டிய கலை நுணுக்கங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.
நான் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாத காலங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக ஊட்டியில் உள்ள படகு இல்லங்களில் கூடுதல் வசதிகளை செய்வதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியாருக்கு நிகராக தமிழ்நாடு ஹோட்டல்களை தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.