தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் 15ஆவது சட்டப்பேரவைக்கான கால அவகாசம் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் மட்டுமின்றி, அடுத்தடுத்த நிலைகளில் உள்ள மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த இருபெரும் தலைவர்களின் மறைவிற்கு பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தல் பலரது கவனங்களையும் ஈர்த்து வருகிறது.
அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கூட்டணி, தேர்தல் வியூகங்கள், தேர்தல் அறிக்கைகள் உள்ளிட்டவை குறித்து வாக்காளர்களிடம் தொடர்ந்து பரப்புரை மூலம் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கட்சியினர், தங்கள் தலைவர்களுக்காக அதிநவீன பரப்புரை வாகனங்களைத் தயார்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காகக் கட்சிகள் கொடுத்த ஆர்டர்களின் பேரில் கோவை, சிவானந்தா காலனியில் உள்ள கொயாஸ் நிறுவனத்தில் பரப்புரை வாகனங்கள் வடிவமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இங்கு பரப்புரையில் ஈடுபடுவோர் ஓய்வுக்காகவும், நிர்வாகிகளுடன் அமர்ந்து பேசவும் பிரத்யேக வாகனங்கள் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து கொயாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகமது ரியாஸ் கூறுகையில், முதன் முதலில் கார்களுக்கு தேவையான சீட் கவர் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தோம். பின்னர், கார், வேன், பரப்புரை வாகனங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சிறு சிறு மாற்றங்களை செய்து வந்தோம்.
முன்னர், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பரப்புரை வாகனங்களைத் தயார் செய்து கொடுப்பதற்கான ஆர்டர்கள் வந்தன. அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாகனங்களைத் தயார் செய்து கொடுத்ததால், தொடர்ந்து பரப்புரை வாகனங்களுக்கான ஆர்டர்கள் வருகின்றன. இதற்காக வாடிக்கையாளர்கள் புதிதாக டெம்போ டிராவலர் வாகனங்களை வாங்கி, அதை பதிவு செய்து எங்களிடம் கொண்டுவந்து கொடுக்கின்றனர். அவற்றை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகளுடன் புதுப்பித்து தருகிறோம்.
வாகனத்தை முழுமையாக தயார்படுத்த இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் என்பதால், வாடிக்கையாளர்கள் வாகனங்களை முன்கூட்டியே ஒப்படைத்துச் செல்கின்றனர். தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்தும் பரப்புரை வாகனங்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, தலைவர்களின் பரப்புரை வாகனங்கள் தயாராகியுள்ளன.
பரப்புரை வாகனத்தில் உள்ள சிறப்பம்சம் என்ன? ஹைட்ராலிக் மேடை, தானியங்கி மேடை, சொகுசுப் படுக்கை, இருக்கை, மேஜை, கழிப்பறை, தொலைக்காட்சி, ஆன்டெனா, சேட்டிலைட், ஃபோகஸ் லைட், ஒலிப்பெருக்கி, ஸ்பீக்கர், ஏர் சஸ்பென்சன், இரு பக்கவாட்டிலும் பாதுகாவலர்கள் பிடித்துக்கொண்டு நிற்பதற்கான ஃபுட்போர்டு, குளிர்சாதன வசதி ஆகியவற்றை அவர்களின் விருப்பத்திற்கேற்ப பொருத்தித் தருகிறோம் என கூறிக்கொண்டே பரப்புரை வாகனங்களை தயார் செய்கிறார் பரபரப்புடன்.