கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்கள் கொண்ட இந்தக் கடையில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த நவ.27-ஆம் தேதி இரவு வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வென்டிலேட்டரைக் கழற்றி, அதன் வழியே கடைக்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்குள் இறங்கி, அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கு தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.28) கடையைத் திறந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஊழியர்கள், ஏசி வெண்டிலேட்டர் கழட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், மர்ம நபர்கள் அதன் வழியே புகுந்து, தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருப்பதை உணர்ந்து, உடனடியாக இது குறித்து கடை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.