எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு கோயம்புத்தூர்: ஒசூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, ‘பூத் கமிட்டி அமைத்தல், பாசறை அமைத்தல் போன்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைப்பது குறித்து ஆலோசிக்கபட்டது.
எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாரை அறிவித்தாலும், எடப்பாடி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். திமுக அரசு எந்த திட்டமும் கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது, கேட்ட திட்டங்கள் கிடைத்தது. அவர் கொடுத்த திட்டங்கள் இப்போது வரை செயல்பாட்டில் இருக்கின்றது. தமிழக மக்கள் எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் என விரும்புகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. கோவை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் செயின் பறிப்பு உள்ளிட்ட மோசமான சம்பவங்கள் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறுவது இல்லை. மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது திமுக அரசுக்கு தெரிவதில்லை.
மக்களைப் பற்றி சிந்தித்து, மக்களுக்குத் தேவையான பணிகளை செய்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வந்தால்தான் விடிவு காலம் கிடைக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும், எப்பொழுது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொல்லும் பதில் சரியானது அல்ல. சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசியது வெளியில் தெரிவிக்கப்படவில்லை. இந்த தாக்குதல் போன்ற சம்பவங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
இது போன்ற பதில்களை அமைச்சர் சொல்லக் கூடாது. காவல் துறை பொறுப்பு திமுகவிடம்தான் இருக்கிறது. ஸ்டாலின் பொறுப்பில் காவல் துறை இருக்கிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் இருந்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால்தான் தொழில் துவங்க வருவார்கள். உடனடியாக இந்த அரசு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜக பிரமுகரா? பகீர் கிளப்பும் திமுக ஐடி விங்!